Thursday, March 22, 2018

விமலை நிராகரிக்கும் தயாரிப்பாளர்கள்: காரணம் என்ன?

  Yarldeepam       Thursday, March 22, 2018

தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் நடிகர் விமல். காளைமாட்டிற்குப் பிரபலமான திருச்சி மணப்பாறையிலிருந்து சென்னை வந்த நடிகரை பசங்க படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சசிகுமார்.

கம்பெனி புரடக்‌ஷன் தயாரித்த ’பசங்க’ படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். 2009இல் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றதால் கதாநாயகனாக புரமோஷன் ஆன விமல், தற்போது ஒரு படத்திற்கு கேட்கும் சம்பளம் ஒரு கோடி. கடைசியாக வந்த மன்னர் வகையறா இவர் நடித்து வெளியான 23ஆவது படம். இவரை வைத்து படம் தயாரித்த பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் தெருக்கோடிக்கு வந்து தொழிலை விட்டு ஊருக்குப் போய்விட்டனர்.

பசங்க, களவாணி இரண்டு படங்கள் மட்டுமே இவர் நாயகனாக நடித்து பெரும் வெற்றி பெற்ற படங்கள். சுமாரான வெற்றி பெற்ற வாகை சூடவா, மஞ்சப்பை, தூங்கா நகரம், தேசிங்கு ராஜா, கலகலப்பு இவற்றிலெல்லாம் நடிகர்கள் கூட்டணியில் இவரும் இருந்தார். தமிழ் சினிமாவில் படப்பிடிப்புக்கு வராத சோம்பல் நடிகர்கள் என அந்தக் காலத்தில் நவரச நாயகன் கார்த்திக், முரளி ஆகியோரைக் குறிப்பிடுவார்கள். சமகாலத்தில் சிலம்பரசன் இந்த விஷயத்தில் பிரபலமானவர், ஆனால் இவர்களுக்கெல்லாம் அண்ணன் விமல் என்கிறது கோடம்பாக்க தயாரிப்பு நிர்வாகிகள் தரப்பு தகவல்.

கதை கேட்டு அட்வான்ஸ் வாங்கும் வரை விமல் மொபைல் வேலை செய்யும், கால் அட்டன் செய்வார். பிறகு ரிங் போகும் எடுக்கமாட்டார். அதையும் கடந்து ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துசேர மாட்டார் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். நடிக்கவே தயங்கும் இந்த மாதிரி நடிகர்களால் மற்ற புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் தடைபடுகிறது என்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை எப்போதும் இல்லாத திருவிழாவாக, விமரிசையாகக் கொண்டாடிய நடிகர் விமல், தன்னைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்ற களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இருப்பதாக பிறந்த நாள் மேடையில் அறிவித்து பலத்த கைதட்டலைப் பெற்றார். அப்போது அந்தப் படத்தின் இயக்குனர் சொர்ணம் உடனிருந்து உற்சாகப்படுத்தினார். அதன் பின்பு வந்த மன்னர் வகையாறா விமல் தயாரிப்பில் வெளிவந்த படம், முதல் வாரமே முடங்கிப்போனது. படத் தயாரிப்புக்கு முழுப் பணத்தையும் வட்டிக்கு வாங்கியிருந்ததால் அவருக்கு பெருத்த நஷ்டம்.

பைனான்சியரின் கடனை அடைக்க, இரண்டாம் பாகத்தின் பெயரை உத்தரவாதமாகக் கூறியும், ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாகச் சொல்லியும் விநியோகஸ்தர்கள் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார் விமல். தற்போது விநியோகஸ்தர்களுக்கு டிமிக்கி கொடுப்பதற்காக, தான் அந்த இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கவில்லை என்றும், இயக்குநரே தயாரிப்பதாகவும் தன்னுடைய தயாரிப்பில் வெளிவரும் படங்களில் மட்டுமே தன்னுடைய கடனை அடைக்க முடியும் எனவும் பல்டி அடித்து பேசிவருகிறார். இதனால் மன்னர் வகையறா படத் தயாரிப்புக்கு கடன் கொடுத்த விநியோகஸ்தர்கள் சம்பந்தப்பட்ட சங்கங்களில் புகார் கொடுத்துள்ளனர். எனவே விமல் பழைய கடனை அடைத்தால் மட்டுமே அவர் நடித்த படங்கள் திரைக்கு வரும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் படம் நடித்துத் தருகிறேன் என்று கூறி பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கும் வேலையும் ஒரு பக்கம் நடந்துவருகிறது. ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்களின் தொலைபேசி அழைப்பைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவரும் விமல், தற்போது நடித்துவரும் படங்களுக்கு வியாபாரத் தடை விதிக்க வேண்டும் என்று இவரது படங்களின் விநியோக உரிமை வாங்கி நஷ்டமடைந்தவர்கள் சங்கங்களில் புகார் கொடுக்கத் தயாராகிவருகின்றனர்.
logoblog

#hashtag

Thanks for reading விமலை நிராகரிக்கும் தயாரிப்பாளர்கள்: காரணம் என்ன?

No comments:
Previous
« Prev Post